பாடம் எண் 3:
பாடத்தின் தலைப்பு: தூய கலிமா
மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 – வது வகுப்பு)
பாடத்தின் உள்ளடக்கம் (content):
3. தூய கலிமா
தூய கலிமா என்றால் தூய்மையான சொல் என்று பொருள்.
“லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி”
- என்ற இந்த சொற்றொடரே தூய்மையான கலிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த கலிமாவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. .
அப்படியானால் இதன் விளக்கம் என்ன?
“லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பதன் பொருள்
“அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ எதுவும் இல்லை என்பது பொருள்.
‘இலாஹ்’ என்றால் ‘இறைவன்’ என்றும் ‘வணக்கத்துக்குரியவன்’ – என்றும் சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம். எனினும் இதன் பொருள் மிக விரிவானது.
- வணக்க வழிபாடுகள்
- ஒழுக்க விதிமுறைகள்
- நன்மை எது தீமை எது என்பது பற்றிய அளவுகோள்கள்
- சமூக அமைப்புக்குத் தேவையான சட்டங்கள்
இவ்வாறு மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் – நம் எல்லோரையும் படைத்துப் பாதுகாக்கின்ற, அல்லாஹு தஆலா ஒருவனுக்கே சொந்தம்; வேறு யாருக்கும் இத்தகைய எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது தான் – லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பதன் பொருள் ஆகும்.
“முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – என்பதன் பொருள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வல்ல அல்லாஹ்வின் திருத்தூதராக விளங்குகிறார்கள் என்பது தான்.
அதாவது – இறைவனிடம் இருந்து பெறப்படுகின்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் உலக மக்கள் அனைவருக்கும்
- வழி காட்டி
- விளக்கமளித்து
- வழி நடத்திச் செல்கின்ற – இறைவனின் தூதராக – முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் விளங்குகிறார்கள் என்பது தான்.
எந்த ஒரு மனிதர் தன்னைப் படைத்த அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறாரோ அவரே ஒரு முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்.
அது போலவே எந்த ஒரு சமூக அமைப்பு அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறதோ அதுவே இஸ்லாமிய சமூக அமைப்பு ஆகும்.
சுருக்கமாகச் சொன்னால் -
“லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதையும்
“முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – என்பது இறைவனுக்கு எவ்வாறு அடிபணிவது என்பதை இறைவனின் திருத்தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமே பெற வேண்டும் என்பதையும் குறிக்கிறது எனலாம்.
பாடம் நடத்தும் வழிமுறை (methodology):
பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:
இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்தல் சிறப்பு.
இலாஹ், ரஸூல் ஆகிய இரண்டு அரபி மொழிச் சொற்களுக்கும் அகராதியிலிருந்தும், திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இருந்தும் குறிப்புகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.
வகுப்பறைக்குள்:
இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?
ஒரு முஸ்லிம் மது அருந்துபவனாக இருக்க முடியுமா?
ஒரு முஸ்லிம் நாட்டில் மதுக் கடைகள் இருக்க முடியுமா? வட்டியின் அடிப்படையிலான வங்கிகள் அங்கே இயங்க முடியுமா?
- இன்னும் இது போன்ற கேள்விகளைத் தக்க தருணத்தில் மாணவர்களிடத்தில் கேட்டு அவர்களுடன் அழகிய முறையில் விவாதித்திட வேண்டும். இது போன்ற விவாதங்களில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது என் அனுபவம்.
பாடம் நடத்தி முடிந்ததும் கேட்க வேண்டிய கேள்விகள்:
இன்றைய முஸ்லிம்களில் எத்தனை பேர் – “லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? ஏன் எல்லா முஸ்லிம்களும் அவ்வாறு வாழ்ந்திடவில்லை? அவர்களை அவ்வாறு வாழச் செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்?
குறிப்பு: தனிப்பட்ட முஸ்லிம் ஒருவரைக் குறிப்பிட்டு அவர் அப்படியில்லை, இப்படியில்லை என்று குறை கூற அனுமதித்து விடக் கூடாது.
